*
அன்புள்ள அப்பாவுக்கு,
ஆசை மகனின் அன்புக் கடிதம்.
இங்கு குளிரூட்டப்பட்ட அறை
கணிப்பொறி பணி எனினும்
நீ உழுத கரிசல்காட்டின்
மணமின்னும் மறக்கவில்லை.
ஏர்பிடித்துக் காய்த்துப்போன
உன் கரங்கள்
இன்னும் என் கைப்பிடியில்
என்னை வழிநடத்தி..
வெயில் மழையில் நீ நனைந்த காட்சிகள்
இன்னும் பொம்மலாட்டங்களாய்
என் கடைக்கண்ணில்..
நான் ஏற முதுகு தந்தாய்,
வறுமையென்னும் கிணற்றிலிருந்து!
நான் எங்கும் நகர்வதில்லை,
உன் கைபற்றாமல்..
கூலிகளாய் தொடர்ந்துவந்த
தலைமுறைகள்..
மாறியது என்னில்,
மாற்றியவன் நீ.
எனக்குத் தெரியும்!
உன் ஒருவேளை கஞ்சியும்
என் பள்ளி நோட்டுகள்.
விடைகொடு அப்பா,
ஏருக்கும் கலப்பைக்கும்.
புறப்படு, இனி உலகம் சுற்றலாம்.
அறுவடைகள் ஆனந்தம்,
உந்தன் மொழிகளில்
இன்று அறுவடைக்குத் தயாராய்
நீ வளர்த்த பயிர்!
நிரப்பி வை,
மகிழ்ச்சி மட்டும்,
களம் முழுவதும்.
பட்டணத்தின் பகட்டுக்கே
விழிவிரிக்கும் உன்னை,
நான் அழைத்துச் செல்கிறேன்,
உலகின் அதிசயம் காண!
வானில் புள்ளியாய்
நீ கண்ட விமானங்கள்
உனை ஏற்றிப் பறக்கையிலே
நீ மகிழ ரசிக்க வேண்டும்.
கண்காணா தெய்வத்திற்கு
கன்னங்கள் கிழிக்கின்றான்!
கண்முன்னே தெய்வம்,
செருப்பாய் நான் ஆனால் என்ன?
எப்பொழுதும் கேட்டிருப்பேன்,
"காணி நிலம் உழுகாமல்
தின்ன சோறு செரிப்பதில்லை"
இப்பொழுது சொல்கிறேன்,
உனை கூட்டிப் பறக்காமல்
நான் சோறு தின்பதில்லை!
*
Monday, July 21, 2008
Subscribe to:
Posts (Atom)